ஞாயிறு, 23 அக்டோபர், 2011

காலத்துயர்



தனிமையில் அழுது கழிகின்ற
பொழுதுகளினூடு
முறையிடும் என்னிரவுகள்,
சில விடயங்களின்
நிகழ்வுகளை
காலத்தின் முட்களைப்
பின்னகர்த்தி
முழுவதுமாய் அழித்துவிட
விண்ணப்பிக்கின்றன,
சாறு பிழியப்பட்ட
கழிவெனக் கருகிய
மனதில்
இன்னும் இன்னும்
ரணமாகிக் குருதி
கொட்டும்,
கந்தலாய்க்
கிழித்து வீசப்பட்ட
உடல் மட்டும்
உஷ்ணத்தைத் தணிக்கும்
துணித் துண்டாய்
தேவையின் நிமித்தங்களில்
தலை நிமிர்ந்து கொள்ளும்.

சாந்த(மா)மருது


வயலும் வயல் சார்ந்த மருதம்
வருடும் உடல் சோர்ந்த நேரம்
கயலும் கை கோர்த்த தொப்ப - பல
அயலும் அதைப் பார்க்க மருளும்

தென்றல் தரும் அந்த மருதம்
திங்கள் எழும்  அந்தத் திசையில்
நெஞ்சம் இதம் கொண்ட மனிதர் - அதில்
நிறைக்க வரும் மந்த மாருதம்

கிழக்கு நிலம் எங்கும் நோக்கின்
கடலும் கடல் சார்ந்த நெய்தல்
உடலின்  உணர்வோடு ஒன்றி - அதில்
உறங்கத் தாலாட்டு இசைக்கும்

காடும் காடயல் முல்லை
கானகத்திடை   எழு  மருதம்
நாடோடு சேர்ந்ததோர்  தருவாய் - இதில்
நாட்படச் சாய்ந்திடல் நம்புதற்கில்லை.

மருதமும் நெய்தலும் கொஞ்சி
முல்லையின் மனமதைத் தாங்கி 
மலையிடைக் குறிஞ்சியின் - இள
மார்பிடை தவழும் தென்றலின் ஊடாய்

மனிதரில் விதைத்திட்ட சாந்தம்
மறைந்திடா சிதைந்தாலும் சிறிது
எளிதினில் மறக்காத வண்ணம் - இதை
எத்தியே வைத்திடல் ஏற்றம் என்றுரைப்பேன்

சாந்தமும் மருதமும்  சேர்ந்திடும் பூமி
நெய்தலும்  முல்லையும் சாமரம் வீசி
குறிஞ்சியின் சாரலால் குளிர்ந்தவள் - நான்கு
நிலங்களால் சூழ்ந்த சாந்தமா மருது!!!
Bottom of Form

எதிர்பார்ப்புக்கள்




தனியாக நடப்பட்ட
இந்த மரத்திற்கு
ஆதியும் இல்லை
நாதியும் இல்லை,

தானாகவே நிலம் பிளந்து
தன்னை நிறுத்திக் கொண்டது,
காலால் ஊற்றெடுத்து
தலையால் உணவெடுத்து
தளைத்த பொழுதுகளில்

இளமையின் உல்லாசத்தில்
பூத்துக் குலுங்கிய பொழுதுகளில்

உல்லாசத்தின் உச்சத்தில்
கருவாகிக் 
காயாகிய பொழுதுகளில்

 எனது உடல்
சடைத்து
நிழல் தந்த பொழுதுகளில்

எல்லாம் இருந்தன
எல்லோரும் இருந்தனர்,

இன்னும் மாய்கின்றேன்,
அவை  எப்படி
இப்படி 
மறைந்து போயின....



இரண்டாவது இயல்புகள்


நரை, திரை, மூப்புடன்
போட்டியிட்டபடி
இரண்டாம் இயல்புகளும்
வளர்கின்றன,
அறியாமல் வளரும்
அவற்றின் பசியைத்
தீர்க்க முடியாமல்
நாளும் சவரக் கத்தியினால்
சீவிக் கத்தரிக்கிறேன்,
இருந்தும் வேர்
உள்ளிருந்து
வெறுப்பேற்றிக்
 
கொண்டிருக்கிறது.

ஸ்பரிசம்


மேகம் சூழ்ந்த இரவின்
மெல்லிய தென்றல்
யன்னல் திறந்து
கன்னத்தில் முத்தமிடும்,
தாயின் அதரங்கள்
வருடும் கணங்களில்
வான் இறங்கி
சொர்க்கத்தின் வழிகாட்டும்,
செல்லக் குழந்தையின்
சின்னக் கன்னங்கள்
சிவந்து குவிந்து
குதூகலிக்கும்,
எங்கே கிடைக்கும்
இந்த சிலிர்ப்பும்
மெய் மறப்பும்,
தாய்க்கேது
மாற்றீடு.

தண்ணிச் சோறும் சாம்ப வாழக் கருவாடும்..

கொலனி வயல் உழுது
குறுணல் சோறாக்கி
குறுக்கு வாய்க்கால் வடிச்சு
குறட்டை மீன் குழம்பு வச்சு
பொட்டியான், பனையான்
உளுவ, விராலோட
இறாலும் பொரிச்சிவச்சு
பாலாணம் மணக்கின்ற
பரண் சோறு திண்டவன்தான்,
 
காலம் தெசை மாறி
கைல குழல் தந்ததால
சொல்லுக் கேளாத
சொந்தமெல்லாம் வந்திடிச்சி,

காசிக்கும் பஞ்சமில்ல - யாரும்
கௌரவத்தில் விஞ்சவில்ல 
சொந்தங்க  கூடி நின்னு
சொர்க்கத்தப்  பறிச்ச கதை
சொல்லாமப் போனேனண்டால்
செல்லரிச்சிப் போகாதா
செத்த இந்தப் பாவி நெஞ்சு,

கனடாவும் கேட்டதில்ல -ஏன்
தல நகரே கேட்டதில்ல
தவிச்ச எங்க ஊர் வாய்க்குத்
தண்ணியாத்தான் நாங்கரூந்தோம்,
பொடரியில புடிச்சிழுத்து
புழுதியில பொரட்டி வாட்டி
ஊர உட்டுத் துரத்தி உட்டா
ஒதுங்க இடம் தேட வேணாம்?

கைல குழல் எடுத்துக்
கெடச்ச சொகம் பாதிஎண்டா
சாம்ப வாழக் கருவாட்டுத்
தண்ணிச் சோறு மீதிஎண்டு
அலியார்- கதீசம்மா
பேரனுக்குத் தெரியாதா?

நெனச்ச மனை போச்சி,
நேசிச்ச மனசெல்லாம்
நெருப்பள்ளிக் கொட்டியாச்சி,
கெடச்ச  மனையோடக்
கெடந்து   செத்தாப்
பிழையாமோ?