வியாழன், 22 மார்ச், 2012

எங்கே செல்லும் இந்தப் பாதை....

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி

இலங்கையின் புரையோடிப் போன இனப் பிரச்சினைக்கு முள்ளி வாய்க்கால் முற்றுப் புள்ளி வைத்து விட்டதாக இறுமாந்திருந்த பேரினவாதிகளுக்கு பேரிடியாக விழுந்திருக்கிறது உலக வல்லரசுகளின் தீர்க்கமான நடவடிக்கைகள். என்னதான் மார் தட்டிக் கொண்டாலும் யுத்தம் வெல்லப்பட்ட தென்னவோ காட்டிக் கொடுப்பால்தான் என்பதனை சிறு குழந்தைகூட அறியும். அந்த நிலைமையில் தங்களது ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டி ஒரேயடியாகச் சாய்த்து விட்டால் எல்லாம் ஓய்ந்து விடும் என்று எண்ணிய நிலையில் ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி வந்திருக்கிறது இனப்பிரச்சினை. மீண்டும் பேச்சு வார்த்தைகள் தீர்வுத்திட்டங்கள், புறக்கணிப்புக்கள், போராட்டங்கள் என்று புது வடிவம் காணப் போவது போல் தோன்றுகிறது.
இதற்கிடையில் எவ்வளவோ போராட்டங்களையும்,ஆர்ப்பாட்டங்களையும் அணிவகுப்புக்களையும் நடாத்தி முடித்திருக்கின்றார்கள் நம்மவர்கள். எல்லாமே விழலுக்கிறைத்த நீராக வீணாகிப் போயின. போதாத குறைக்கு உடனிருந்த இந்தியா கூட மாறி வாக்களித்திருக்கிறது- அதுவும் ஒரேயொரு ஆசிய நாடாக.
பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுதல் என்பர், பிரச்சினையை ஆரம்பித்தவர்களும் அவர்களே, முடித்து வைத்தவர்களும் அவர்களே என்று எத்தனையோ பேர் கூறி விட்டார்கள். ஆனால் இவ்வளவு நடந்தும் யாரும் எந்தப் பாடமும் படிக்கவில்லை என்பதுதான் மிகவும் கவலையான விடயம்.
1970 தொடக்கம் 1977 வரையான காலகட்டத்தில் சீனாவுடன் நெருங்கிய எமது சொந்தங்களைத் தட்டிக் கேட்பதற்கு என்றுதானே எமது நாட்டுக்குள் இவ்வளவு பிரச்சினைகளையும் உருவாக்கினார்கள். இன்றும் நாம் அதே வழியில்தான் செல்கின்றோம், அவர்கள் சும்மா இருப்பார்களா என்று தெரியவில்லை.
தேசப்பற்று என்று தொண்டைகிழியக் கத்துபவர்களுக்கு, அதிலும் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு யதார்த்தமும் புரியவில்லை, ராஜதந்திரமும் தெரியவில்லை. இனவாதத் தீயைக் கக்கிக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்களை அடக்கி வைப்பதற்கான ஆளுமை இல்லாமலிருக்கிறதா அல்லது அதற்கான தேவை இல்லையெனக் கருதுகிறார்களோ  தெரியவில்லை.
எது எப்படியிருப்பினும் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் இதுவெனக் கருதலாம். எல்லாவற்றையும் இழந்து எதிர்காலம் குறித்த எந்தவித நம்பிக்கையும் இல்லாதிருந்த தமிழ் சமூகத்துக்கு எங்கோ ஒரு மூலையில் சிறியதொரு நம்பிக்கைக் கீற்று தென்படுவதாகக் கொள்ளமுடியும் போல் தோன்றுகிறது,
இதற்கிடையில் நாட்டைவிட்டுத் தப்பியோடி அந்நிய நாடுகளில் தஞ்சம் புகுந்தோர், ஒன்று அல்லது இரண்டு தலைமுறையினர் தாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டது போல் உணர்ந்தாலும் அடுத்த தலைமுறை அதனை உணரப் போவதுமில்லை, மீண்டும்  வரப் போவதுமில்லை. அவர்களது வாழ்வு வளம் பெற்று விட்டது போலவே தெரிகிறது.
வான்கூவர் நகரத்திலே அவர்களின் நடமாட்டத்தை நன்றாகவே உணர முடிகிறது.