வெள்ளி, 10 ஜூன், 2011

கடைசி நினைவு

அந்த நாள் வரும்
எனது உடல் வெள்ளைச்
சீலை மேல் கிடக்கும்
ஒரு மெத்தையின் நான்கு மூலைகளிலும்
அழகாக மடித்துச் சுற்றப்பட்ட துணிமேல்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களாலும்
இறந்து கொண்டிருப்பவர்களாலும்
முழுவதுமாய் நிரப்பப்பட்ட
ஒரு வைத்தியசாலையில்,

ஒரு குறிப்பிட்ட வேளையில்
வைத்தியர் முடிவெடுப்பார்,
எனது மூளை தனது வேலையை
நிறுத்திக் கொண்டதாக,
அதாவது
எல்லாக் குறிக்கோள்களுக்கும்
நோக்கங்களுக்குமான
எனது வாழ்க்கை நின்று  விட்டதாக,

அப்படி நடக்கும் பொழுது
எனது உடலின் மீது
 இயந்திரங்களின்  மூலமாக
ஒரு செயற்கை வாழ்வைத்
திணியாதீர்கள்,

இதை எனது மரணக் கட்டில்
என்று அழையாதீர்கள்,
இது எனது வாழ்வுக் கட்டில்
என அழைக்கப்படட்டும்,

எனது உடல் இங்கிருந்து
எடுத்துச் செல்லப்பட்டு
ஏனையோர் முழுமையாக
வாழ்வதற்கு உதவி செய்யட்டும்,

எனது பார்வையை
ஒரு மனிதனுக்குக் கொடுங்கள்,
ஒரு சூரிய உதயத்தை
ஒரு குழந்தையின் அழகு முகத்தை
ஒரு பெண்ணின் கண்களின் காதலினை
காணாத ஒருவனுக்கு,

எனது இதயத்தை ஒருவனுக்கு...
தனது  இதயத்தில்
முடிவில்லா வேதனையைத் தவிர
வேறெதனையும்  சுமக்காதவனுக்கு,

எனது இரத்தத்தை ஒரு இளைஞனுக்கு...
அவனது நொறுக்கப்பட்ட காரிலிருந்து
இழுத்து எடுக்கப்பட்டவனுக்கு,
அவன் சில வேளை அவனது
பேரக் குழந்தைகள் விளையாடுவதனைப்
பார்த்து ரசிக்க முடியும்,

எனது சிறு நீரகங்களை இன்னுமொருவனுக்கு..
வாரா வாரமாய் வாழ்வுக்காய்
இயந்திரத்தில் தங்கியிருப்பவனுக்கு,

எனது எலும்புகளை
எடுத்துக் கொள்ளுங்கள்...
சகலவித தசை, நார்,
உடலின் நரம்புகள்
எல்லாவற்றினாலும் ஊனமுற்ற
ஒரு குழந்தை எழுந்து நடக்கட்டும்,

எனது மூளையின்
சகல மூலைகளிலும் தேடுங்கள்//
எனது கலங்கள் தேவையானாலும்
எடுத்துக் கொள்ளுங்கள்- அவை வளரட்டும்,
சில வேளை ஒரு செவிடான சிறுமி
அவளின் யன்னலினூடாக
மழையின் ராகத்தை ரசிக்கட்டும்,

மிகுதியை எரியுங்கள்,
காற்றில் சாம்பாலை தூவுங்கள் ..
பூக்கள் மலர்வதற்காய்,


நீங்கள் புதைப்பதானால்
எனது பிழைகளையும்
எனது பலவீனங்களையும் - நான்
ஏனையோருக்கு இழைத்த அநீதிகளையும்
மட்டும் புதையுங்கள்,

எனது பாவங்களை
சாத்தானுக்குக் கொடுங்கள்,
எனது ஆத்மாவினைக் கடவுளுக்குக்
காணிக்கை யாக்குங்கள்..


தற்செயலாக என்னை நீங்கள்
நினைவு கூர நாடினால்,
உங்களை நாடுபவர்களிடம் - அதனை
அன்பும் பரிவும்  மிக்க சொற்களாலும்
செயல்களாலும் கொடுத்து விடுங்கள்

நான் கேட்டவற்றை யெல்லாம்
நீங்கள் வழங்குவீர்களானால்
எனக்கு மரணம் கிடையாது !!!


தமிழில்:   நஜிமுதீன்